NTK: 2010இல் ஆரம்பிக்கபட்ட நாம் தமிழர் கட்சி, 2016 ஆம் ஆண்டில் தான் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 4,58,104 வாக்குகளுடன் ஒன்பதாம் இடம் பெற்றது. இதற்கு பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு அதனுடைய தனிபெரும்பான்மையை உறுதி செய்து வந்தது. அதோடு அக்கட்சியின் கொள்கையையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தது.
ஆனால் தற்போது அதில் மாற்றம் தென்படுகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் முக்குலத்தோர் வாக்கு வாங்கி அதிகளவில் உள்ளது. அதனால் அந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்பவரை வேட்பாளராக சீமான் அறிவித்துள்ளார். மேலும் பிராமண சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு இம்முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சென்ற தேர்தலில் இவர்களுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீமானின் இந்த செயலுக்கு கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல் பரவியுள்ளது. இவரின் சாதி வாரியான வேட்பாளர் தேர்வு முறை கட்சியில் உள்ளவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சாதியற்ற சமூகம், பெண்களுக்கு முன்னுரிமை போன்ற சீமானின் கருத்துக்கள் தான் அவர் அரசியல் களத்தில் நான்காவது இடத்திற்கு வர உதவியது. ஆனால் தற்போது சீமான் அந்த கொள்கையிலிருந்து பின்வாங்குவதாக தெரிகிறது என கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர்.

