TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையிலும் கூட அக்கட்சிக்கு ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது. ஆனால் கரூரில் ஏற்பட்ட துயரத்தால் அதன் செல்வாக்கு குறைந்துள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மதியழகனை காவல் துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாகியிருக்கும், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதனை விசாரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது நீங்கள் தான், அப்படி இருக்க உங்கள் மீது தவறு இல்லை என்று நீங்கள் எப்படி கூறுகிறிர்கள் என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் தரப்பு, நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைக்கவில்லை, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தான் ஒருங்கிணைத்தார்.
என் மீது தவறில்லாத பட்சத்தில் எவ்வாறு ஆச்ஷன் எடுக்க முடியும் என்று கூறப்பட்டது. கட்சி ஆரம்பித்த முதல் வருடத்திலேயே இவ்வளவு பெரிய துயரத்தை எதிர்கொண்டிருக்கும் விஜய்க்கு, இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஒரு பிரச்சனை வந்த உடன் ஓடி ஒளியும் இரண்டாம் கட்ட தலைவர்கள் எப்படி நாளை தமிழகத்தை ஆட்சி செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.