மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அடுத்த சோதனை! எச்சரிக்கும் சீமான்

0
140
Seeman-News4 Tamil Online Tamil News
Seeman-News4 Tamil Online Tamil News

மத்திய அரசின் சார்பாக இயங்கும் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய தற்போது தனித்தனியாக நடத்தப்படும் தேர்வுகளை ஒன்றிணைக்கும் வகையில் தேசிய தேர்வு முகமை (National Recruitment Agency – NRA) அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் பணிகளுக்குத் தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை (National Recruitment Agency – NRA) அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுவரை இரயில்வே, வங்கி, நிதிச்சேவைகள் என பல்வேறு துறைகளுக்கு எஸ்.எஸ்.சி (SSC), ஆர்.ஆர்.பி (RRB), ஐ.பி.பி.எஸ். (IBPS) எனத் தனித்தனி தேர்வு முகமைகள் மூலம் தங்களது துறைகளுக்கு ஏற்ப துறைசார்ந்த தேர்வுகளை நடத்திப் பணியாளர்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், அந்தத் தேர்வுகளை எளிமையாக்குவதாகக் கூறி ஒரே பொதுத்தேர்வின் கீழ் மத்திய அரசின் அனைத்துவிதமானப் பணியாளர்களையும் தேர்வுசெய்ய தேசிய தேர்வு மையத்தை தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்வு முறையை எளிமையாக்கும் முயற்சியல்ல; ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே பொது விநியோகம் எனும் ஒற்றைமயமாக்கலின் நீட்சியே!

வெவ்வேறு விதமான துறைகளுக்கு ஒரே பொதுத்தேர்வை வைத்து தேர்வு செய்தால் துறைசார்ந்த திறனாளர்களை எவ்வாறு கண்டறிய முடியும்? அல்லது அதற்கென தனியாகத் தேர்வு நடத்தப்படுமா? எனில், ஒரு பணிக்கு இரண்டு தேர்வுகளை எழுத வேண்டுமா? அனைத்துத் துறைகளுக்குமான பொதுவான உள்நுழைவுத் தேர்வுகளை மட்டுமே Common Eligibility Test (CET) இந்த தேர்வாணையம் நடத்துமெனில் துறைசார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கத் தனியான தேர்வு முகமைகள் செயல்படுமா? எனில், ஒரு துறைக்கு எதற்கு இரண்டு தேர்வாணையங்கள்? என எழும் அத்தனைக் கேள்விகளும் தேர்வுமுறைகள் முன்பைவிட இன்னும் கடுமையாக்கப்படுவதையே காட்டுகிறது.

மேலும், இந்த தேசிய தேர்வு முகமையின் தலைமையகம் டெல்லியிலிருந்து செயல்படும் என்பதும் இந்தி பேசும் மக்களுக்கே சாதகமாக அமையும். ஏற்கனவே, தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வங்கி, இரயில்வே, அஞ்சலகம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் வடமாநிலத்தவர் பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதுவும் தமிழே தெரியாதவர்கள் தமிழ் பாடத்தில் தமிழர்களைவிட அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடையும் அளவுக்கு ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மலிந்துக் கிடக்கிறது. இதில் அனைத்துத் துறைகளுக்கும் ஒரே தேர்வு அதுவும் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமைப்பினால் நடத்தப்படும் என்பது வடமாநிலத் தேர்வர்களுக்கே வாய்ப்பாக அமையும். மேலும், அனைத்து அதிகாரங்களும் ஒற்றை அமைப்பிடம் குவிக்கப்படுவதால் அது அதிக அளவிலான ஊழலுக்கும் , முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.

மேலும், தற்போது 12 மொழிகளில் இந்தத் தேர்வு முகமையின் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தாலும் ஏற்கனவே அஞ்சலக, இரயில்வே தேர்வுகளில் மாநில மொழிகள் நீக்கப்பட்டது போல எதிர்காலத்தில் ஒற்றை ஆணை மூலம் அனைத்துத் தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டு மாநில மொழிகள் புறக்கணிக்கப்படவும் வாய்ப்புண்டு. இதுவரை தனித்தனி உத்தரவுகள் மூலம் பிறக்கப்பட்டதை இனி ஒரே உத்தரவின் மூலம் அனைத்துத் தேர்வுகளையும் கட்டுப்படுத்தவே இந்த தேர்வு முகமை உதவும். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு பாதகமாகவும் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் பயின்ற மாணவர்களுக்கு சாதகமாகவுமே இந்த தேர்வுகள் இருக்கும் என்பது தெளிவாக புலனாகிறது. எனவே, மத்திய அரசின் மும்மொழிக்கொள்கைப் பாடத்திட்டத்தினை நோக்கி மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளும் முயற்சியாகவே இந்தத் தேர்வு முகமையைப் பார்க்க வேண்டியுள்ளது.

எதிர்காலத்தில் இந்த தேர்வு முகமை மாநில அரசுப் பணியாளர்களுக்கும், தனியார் துறையின் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பானது மாநிலங்களின் தன்னாட்சி, இறையாண்மை உள்ளிட்டவற்றை நசுக்கும் நடவடிக்கையேயாகும். இதன்மூலம் மாநில அரசுக்கும், தாய்மொழியில் பயின்ற மண்ணின் மக்களுக்கும் இடையேயான நிர்வாகத்தொடர்பு துண்டிக்கப்பட்டு மொழி புரியாத அந்நியர் ஆதிக்கம் மாநில அரசின் நிர்வாகத்துறையிலும் மேலோங்கும்.

இரயில்வே, வங்கிகள், விமானநிலையம், என அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ள மத்திய அரசு தேர்வு முகமையை மட்டும் ஒற்றைமயப்படுத்தி அரசே நடத்தும் என்பது தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் முகவராக செயல்பட மட்டுமே உதவும். மேலும் எதிர்காலத்தில் இந்த முகமையும்கூட தனியார் நிறுவனத்திடம் தாரைவார்க்கப்படலாம். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியார்களை ஒரே ஒரு அமைப்பு நடத்தும் ஒற்றைத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் வாய்ப்பென்பது மிகப்பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகை செய்யும்.

ஆகவே, மாநிலத்தின் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் பறிக்கும் தேசிய தேர்வு முகமையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பினையும் அழுத்தத்தையும் கொடுத்து சாத்தியப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleஇனி இ பாஸ் இல்லாமலேயே எந்த மாநிலத்திற்கும் செல்ல முடியும்: அதிரடி அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை
Next articleசைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!