TVK: இயக்குநர் சேரன் சமூக வலைதளங்களில் தன் கருத்துகளை பகிர்ந்து வருபவர். அவர் சமூக பிரச்சனைகள், திரைப்படம், அரசியல் நிலைமை போன்ற பல விஷயங்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யை பற்றியும் பல்வேறு வகையான பதிவுகளை வெளியிட்டுள்ளார் சில சமயங்களில் அவரை பாராட்டியும், சில சமயங்களில் விமர்சனங்களுடனும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி, தனது கட்சியை தொடங்கியதை தொடர்ந்து, பலரும் அதனை பற்றி ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சேரன் எழுப்பிய புதிய கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் விஜய் கட்சியினரிடம் நட்புடன் ஒரு கேள்வி கேட்கிறேன், கடந்த பத்து ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்களுக்கான பிரச்சனைகளை முன்வைத்து போராடி வருகிறது. அதே கருத்துக்களையும் கோட்பாடுகளையும் இப்போது விஜய் கட்சி முன்வைக்கிறது.
ஆனால் வாக்காளராக நீங்கள் நாம் தமிழர் கட்சியை ஒதுக்கி, விஜய்யை ஆதரிக்க நினைப்பதற்கு காரணம் என்ன? தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன், என பதிவிட்டுள்ளார். சேரனின் இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவ, பல்வேறு கோணங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் சேரனின் கேள்வி முற்றிலும் நியாயமானது என கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மற்றொரு பக்கம், விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும், சேரன் தனது பதிவில், விஜய் பேசுவதை காட்டிலும் சீமான் பன்மடங்கு திறமையாகவும் தைரியமாகவும் மக்களுக்காக போராடி வருகிறார். அப்படிப்பட்டவரை விட்டு, அரசியலுக்கு புதியதாக வந்த விஜயை ஏன் மேலாக மதிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இதுவரை விஜய் கட்சியினரால் இதற்கான தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை. ரசிகர்கள் சிலர் சேரனை விமர்சித்தாலும், பெரும்பாலான பதிவுகள் வெறும் ஆரவாரத்திலேயே முடிகின்றன.

