TVK NMK: 2026-யில் நடை பெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் மீது வழக்கு பதியப்பட்டிருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று இரவு விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் வீடு திரும்பினார்.
இதற்கு விஜய் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல இருப்பதாக பலரும் கூறி வந்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலினை மையப்படுத்தி பேசியிருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் இருக்கிறது என்றும், அவர் பேசுவதை பார்த்தால் அவரின் மனதில் எந்த காயமோ, வருத்தமோ இருப்பதை போல் தெரியவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் சி.எம் சார் என்று பேசுவது சின்னப்பிள்ளை தனமாக இருக்கிறது என்றும், விஜய் அங்கு சென்றதால் தான் அத்தனை இழப்புகள் நிகழ்ந்தது, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர் வீடியோ வெளியிட்டிருப்பது ஏற்கதக்கது அல்ல என்றும் கூறினார். கூட்டத்தில் ஆள் புகுந்தார்கள், கத்தியால் வெட்டினார்கள் என்று கூறப்பட்டது, நானும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன் ஆனால் அதற்கான அடையாளங்கள் ஏதும் அங்கு இல்லை என்றும் கூறினார்.