NTK: 2026யில் களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய்யை பலரும் விமர்சித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை குறி வைத்து பேசுகிறேன் என்ற பெயரில் முன்னாள் தலைவர்களை அவமரியாதையாக பேசியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணா, எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசையை எடுத்து பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டி கொண்டிருக்கிறார். இங்கே அண்ணாவை வைத்திருக்கிறார், அங்கு எம்ஜிஆர்-யை வைத்திருக்கிறார். அண்ணா, எம்ஜிஆர் போன்ற இரண்டு சனியன்களை கையில் எடுத்து கொண்டு சனிக்கிழமை பிரச்சாரத்திற்கு கிளம்பி விடுகிறார் விஜய் என்று கூறியிருக்கிறார்.
சீமானின் இந்த கருத்துக்கு பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர்களின் புகழை இழிவுபடுத்தும் வகையில் சீமானின் பேச்சு உள்ளது என்றும், இதனை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சீமானின் இந்த அருவருக்கத்தக்க பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது இது இன்னும் தொடர்ந்தால் சீமான் கடுமையான எதிர் வினைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்வதை பொறுத்து கொள்ள முடியாது என்றும், அவரை விட கன்ன பின்னவென பேசிவிட்டு சிரிப்பதற்கு எங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். ஓபிஎஸ்யும் இதற்கான எதிர்வினையை சீமான் சந்திக்க நேரிடும் என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.