ADMK TVK: அதிமுகவில் பல்வேறு சச்சரவுகள் நிகழ்ந்து வரும் வேளையில், அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அதிமுகவின் தலைமையால் 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்த செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட இவர், நால்வர் அணியாக உருவெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர்கள் நால்வரும், ஒரு அணியாக இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பிறகு, ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்தார். டிடிவி தினகரனும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையன் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இவருக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல ஆதரவு இருப்பதால் திமுக இவரை கட்சியில் சேர்க்க முயற்சிக்கிறது என்ற தகவல் பரவியது. ஆனால் அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவில் இணைந்தால் அது அதிமுகவிற்கு செய்யும் துரோகம் என, செங்கோட்டையன் நினைப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறினார். இதனால் வேறு வெளியே இல்லாமல் அவர் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவியது. இது குறித்து தவெக சேர்ந்தவர்கள் செங்கோட்டையனிடம் பேசி வருகிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.
இவ்வாறு செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு மீது பல்வேறு விமர்சனங்களும், வியூகங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தனது கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆம் தேதியான நாளை செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி பரவி வரும் நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தது தவெகவில் இணைவதற்கான முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இபிஎஸ்க்கு பேரிடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

