ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு சவால்களை எதிர் கொண்டது. ஏகப்பட்ட போராட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கபட்டார். இதற்கு பிறகு தான் அதிமுகவின் முக்கிய தலைகளாக அறியப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, அண்மையில் செங்கோட்டையன் என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், பல்வேறு பதவிகளையும் வகித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.
இவரின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கும், விவாதங்களும் வழிவகுத்தது. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் அவருடன் இருந்தவர்களுக்கே அவர் தவெகவில் இணைய போகும் செய்தி தெரியாது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செங்கோட்டையனின் தவெக இணைவு குறித்து ஒரு கருத்தை கூறியுள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து, கொள்ளையடித்து விட்டு, எம்பி, எம்எல்ஏ-வாக இருந்து தன்னை வளர்த்து கொண்டு அந்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது மிகப்பெரிய துரோகம் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பலரும் செங்கோட்டையனின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரையும் தவெகவுக்கு கொண்டு வருவேன் என செங்கோட்டையன் கூறிய நிலையில், இவர்களின் கருத்து அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. இதனால் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு பலமாக இருந்தாலும், செங்கோட்டையனுக்கு அது பாதகமாகவே அமைந்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

