AMMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அரசியல் களத்தை அதிர வைக்கும் வகையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. இவருக்கு சினிமாவில் அதிகளவு ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ரசிகர் கூட்டம் அத்தனையும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாக மாறியது வியப்பில் ஆழ்த்தியது. விஜய்க்கான ஆதரவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.
ஆனாலும் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்த நிலையில் அதனை முறியடிக்கும் வகையில், அதிமுகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவரின் இந்த இணைவு தவெகவிற்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் கோரிக்கை நிறைவேறாமல் போனதால், தவெகவில் சேர்வதற்கு முன்பு இவர் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் தான் இருந்தார்.
பதவிகள் பறிக்கப்பட்ட போதும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதும் செங்கோட்டையனுக்கு முழு ஆதரவை தெரிவித்தது இவர்கள் மூவரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்த நிலையில் தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் தவெகவில் சேர்ந்த கையுடன், இவர்கள் மூவரையும் இணைக்கும் செயலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக செங்கோட்டையன் சில செயல்களை செய்து வருவது போல் தெரிகிறது. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து 5 நாட்கள் ஆன நிலையில், இவர்கள் மூவரும் இன்னும் விஜய்யுடன் கை கோர்க்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, தவெக கூட்டணியில் சேருமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இதுவரை என்னை அழைக்கவில்லை என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் இதற்கு முன் ஒரு முறை, செங்கோட்டையன் தவெகவில் சேர்வது பற்றியோ, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது பற்றியோ என்னிடம் எதுவும் கூறவில்லை என்று தினகரன் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த கருத்தும், செங்கோட்டையனின் நடவடிக்கையும் தவெகவில் சேர்ந்த உடன் உடனிருந்தவர்களை மறந்து விட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

