ADMK TVK: தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் 6 மாதத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ள நிலையில், எங்கு பார்த்தாலும், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் முன்னணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் எல்லா ஊடகங்களிலும் விஜய்யின் தவெக பற்றிய செய்தி தான் தலைப்பு செய்தியாக உள்ளது. மற்ற கட்சியில் கூட நிர்வாகிகள் தான் கட்சி மாறி இணைந்து வருகின்றனர். ஆனால் தவெகவில் முக்கிய அமைச்சர்கள், அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் இணைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் முக்கியமாக அதிமுகவில் 50 ஆண்டு காலம் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பேசு பொருளானது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனின் நிபந்தனை மறுக்கப்பட்டதால், பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் சபதம் எடுத்தார். தவெகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை, அதற்கான வேலைகளை செய்து வருகிறார்.
கொங்கு மண்டலத்தில் ஒருவரும், டெல்டா மாவட்டத்தில் ஒருவரும் தவெகவில் சேர இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அதில் புதிய திருப்பமாக ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனுடன் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஓபிஎஸ்யின் ஆதரவாளர் என்பதாலும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்பதாலும், இபிஎஸ்யின் தலைமையை கடுமையாக எதிர்ப்பவர் என்பதாலும் இவர் தவெகவில் இணைவார் என்று கணிக்கப்படுகிறது.

