TVK: நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி கொண்டே செல்கிறது. அதிலும் முக்கியமாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்கு விஜய்க்கு அதிகளவில் உள்ளது என்று கருத்து கணிப்பு கூறுகிறது.
ஆனாலும் இவையனைத்தும் ரசிகர்கள் கூட்டம், எல்லாமே ஓட்டாக மாறாது என்றும், விஜய்க்கும், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என யாருக்கும் போதிய அரசியல் அறிவு இல்லை என்ற கருத்தும் மேலோங்கி இருந்தது. இதனை கண்டுகொள்ளாத விஜய், மக்களை சந்திக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தினார். கரூரில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனை தொடர்ந்து சில கூட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் நடத்திய தவெக இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியது. இந்த பொதுக்கூட்டத்தில் முழுக்க முழுக்க திமுகவை விமர்சித்து விட்டு அரசியல் குறித்த எந்த ஒரு ஆணித்தனமான கருத்தையும் விஜய் கூறவில்லை. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் நேரடியாக மக்களை சந்திக்கும் முதல் இடம் தமிழகத்தை தாண்டி இருக்கிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.
இந்நிலையில் தான் இன்று கோபி செட்டிபாளையத்தில் முகாமிட்ட செங்கோட்டையன், ஈரோட்டில் வரும் 16 ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்திற்கு அனுமதி வாங்கியதோடு, மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் இணைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டோல்கேட் அருகே 84 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரைக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளதாக அவர் கூறினார்.

