ADMK TVK TMMK: 2021 தேர்தலை காட்டிலும் 2026 சட்டமன்ற தேர்தல் பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் முதலாவது விஜய்யின் அரசியல் பிரவேசம் என்றே கூறலாம். விஜய் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. ஆதரவு அதிகம் இருந்தாலும், விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்ற விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது.
இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், தவெகவில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் தவெகவில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இவ்வாறான நிலையில் தான் அதிமுகவுடன் பாஜக, தமாகா தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணி சேராத காரணத்தினால் இபிஎஸ் மிகவும் அதிருப்தியில் இருந்ததாக அதிமுகவினர் கூறி வந்தனர்.
இந்த சமயத்தில் ஜான் பாண்டியனும் தமமுக கட்சி, அதிமுகவில் தொடருமா, தொடராதா என்பதை பற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று கூறி இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார். இதுவே இவர் அதிமுகவிலிருந்து விலகுவதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இபிஎஸ் மேல் அதிருப்தியில் உள்ள இவருடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக இபிஎஸ் உடன் கருத்து வேறுபாட்டில் உள்ள ஜான் பாண்டியன் தவெகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் யூகிக்கின்றனர்.