கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்

Photo of author

By Ammasi Manickam

கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்

சந்தை ஆலோசகர்கர்களின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி கொண்டு இந்திய பங்கு சந்தையானது முன்னோக்கி ஏற்றம் கண்டு வருகிறது.

அதாவது இதுவரை சந்தையை பாதிக்கும் வகையில் வெளியான நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (CPI), மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் இந்திய தொழில் துறை உற்பத்தியைப் பிரதிபலிக்கும் ஐஐபி உள்ளிட்ட அனைத்து தரவுகளும் இந்தியப் பொருளாதாரமானது தவழ்ந்து கொண்டிருப்பதாகவே குறிப்பிட்டது. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்திய பங்கு சந்தை ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்ட் பாசிட்டிவாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

இதன் விளைவாக இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதுவரை கணித்தபடி ஃபண்டமெண்டல் அடிப்படையில் இந்திய பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறக்கம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மார்க்கெட் ஆலோசகர்கள் கூறியவற்றையெல்லாம் பொய்யாக்கி விட்டு சென்செக்ஸ் ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இன்று புதிய உச்சத்திலேயே நிறைவடைந்தால் அது இந்திய பங்கு சந்தைக்கு மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இனியும் சென்செக்ஸை பின்னுக்கு இழுக்கும் வகையிலான ஃபண்டமெண்டல் செய்திகள் உள்ளிட்ட எது வந்தாலும் சந்தை, அந்த செய்திகளை கண்டு கொள்ளாமல் மேலும் ஏற்றம் காணும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய வர்த்தகமானது புதிய உச்சத்தில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை நடந்த வர்த்தகத்தில் பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 40,938 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததும் சென்செக்ஸ் 41,052 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, கணிப்புகளை பொய்யாக்கி முன்னோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ் 41,308 புள்ளிகளைத் தொட்டு தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது. நேற்றைய குளோசிங் ஆன புள்ளியை விட, இன்றைய உச்சப் புள்ளியானது 350 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. மேலும் இன்று காலை மும்பை பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 12,082 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,158 எனும் உச்சப் புள்ளியைத் தொட்டு தொடர்ந்து வர்த்தகம் ஆகிக் கொண்டு வருகிறது.

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், மீதியுள்ள 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் வர்த்தகமாகி வரும் 2,350 பங்குகளில் 1,245 பங்குகள் ஏற்றத்திலும், 948 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் எந்தவொரு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன.

மேலும் இந்த 2,350 பங்குகளில் 30 பங்குகளின் விலை 30 வார அதிகத்திலும், 92 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. இதில் டாடா ஸ்டீல், வேதாந்தா, ஹிண்டால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கெயில், சன் பார்மா, பார்தி இன்ஃப்ராடெல், என் டி பி சி, யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.