DMK: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் 2023 ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
ஜாமீன் பெற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அல்லது அமைச்சர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது.
இதையடுத்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இந்நிலையில் பண மோசடி தொடர்பான வழக்கில் கோர்ட் சில கருத்துக்களை நீக்கி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணையில் இருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்க கூடாது என கூற முடியாது என வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்கும் அபாயம் உள்ளது. ஆனால் அவர் அமைச்சராக வேண்டுமானால் தனி மனுவாக தாக்கல் செய்து கோர்ட் அனுமதி பெறலாம், ஜாமீன் விதிகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம் என்றாலும் அது சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியுடன் மட்டுமே சாத்தியம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை உட்பட அனைத்து தரப்புகளிலிருந்தும் பதிலை கோரி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.