ADMK DMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்ற பேச்சு வார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தொகுதி வாரியாக, விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக தான் முதலிடம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மைத்ரேயன் போன்ற பல முக்கிய முகங்கள் திமுகவில் இணைந்து தற்போது முக்கிய பதவி வகித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிதாக மோகனூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளராக இருந்த ஆர்.வி.ஆர் செந்தில்குமார் மற்றும் பரமத்தி ஒன்றிய அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவின் முக்கிய முகமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததோடு மட்டுமல்லாமல், முக்கிய அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். இதற்கான வேலைப் பாடுகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் திமுகவும், தவெகவும் தொடர்ந்து அதிமுகவின் டாப் தலைகளை கட்சியில் சேர்க்க முயன்று வருவது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணசாமியின் இணைவு அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.