BJP: இன்னும் 4 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, இன்னும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. மேலும் அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியினால் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் இவர் கட்சி விவகாரங்களிலிருந்து சற்று விலகியே இருந்தார். டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகிய சமயத்தில் தான், அவரை சமாதானம் செய்வதற்காக கட்சி செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லாமல் இருந்தாலும், அண்ணாமலையின் வருகையால் அக்கட்சி ஊடக வெளிச்சத்தில் இருந்தது. இவரால் தான் பாஜக தமிழகத்தில் ஓரளவிற்கு பேசப்பட்டது என்றே கூறலாம். இப்படி இருந்த சமயத்தில் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது.
இந்த இக்கட்டான நிலையில் தமிழக தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது, டெல்லி ரொம்ப தூரத்தில் உள்ளது என்று ஹிந்தியில் பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்பதையே குறிக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அவர் தேர்தலில் போட்டியிட்டால், பாஜகவிற்கு அது வாக்கு வங்கியில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இவர் போட்டியிட மாட்டேன் என்று மறைமுகமாக கூறியது பாஜகவிற்கு பாதகத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.