ADMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதே நேரம் மக்களை சந்திக்கும் பணிகளும், கூட்டணி கணக்குகளும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் அது மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்த இபிஎஸ், பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். வெற்றியை இலக்காகக் கொண்டுள்ள அதிமுகவிற்கு தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு இன்னல்கள் உருவாகி வருகின்றன.
அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதும், அவர் தவெகவில் இணைந்ததும் ஆகும். இந்த சேர்க்கை பெருமளவில் பேசப்பட்ட சமயத்தில், இபிஎஸ்யால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட, ஓபிஎஸ் 1 வாரத்திற்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்பு அதிமுக உரிமை மீட்பு குழு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில், டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, இபிஎஸ்யை எச்சரித்திருந்தார்.
அதுவும் டிசம்பர் 15 என்று அவர் கூறிய நிலையில், டிசம்பர் 15 ஆன இன்று, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நாள் வரை இல்லாத மாற்றம் இன்று ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பெயர் மாற்றம், புதிய கட்சி துவங்குவதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது.