தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன்.
அப்படிப்பட்ட முருக பக்தனாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய வீட்டிற்கு முருகன் வருகிறார் என்றால் சில அறிகுறிகள் உங்களுக்கு தென்படும். அதேபோன்று சில உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வருவதை வைத்து, தெள்ளத் தெளிவாக இது முருகனின் திருவிளையாடல் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
முருகன் உங்களுடன் இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? முருகன் வருகையை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்த தகவல்களை தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.
1. உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தை அல்லது ஆண் குழந்தை முருகனின் முக லட்சணத்தை கொண்டிருப்பார்கள். அதேபோன்று முருகனுக்கு உகந்த நட்சத்திரத்திலோ, திதியிலோ அதாவது கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திரத்திலோ செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இது போன்ற நாட்களில் பிறந்து இருந்தாலும் முருகப்பெருமான் உங்கள் வீட்டில் பிறந்து இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
2. முருகப்பெருமானை மனதார வேண்டி விளக்கேற்றும் பொழுது, அந்த விளக்கின் ஜோதி பிரகாசமாக சிறிது தூரத்திற்கு உயர்ந்து எறிந்தால், அந்த விளக்கின் ஜோதியில் முருகன் உங்கள் கண் முன் நிற்கிறார் என்று அர்த்தம்.
3. அதேபோன்று முக்கியமான வேண்டுதலுக்காக முருகனை மனதார நினைத்து விளக்கேற்றும் பொழுது, அந்த ஜோதியில் இருந்து ஏதேனும் சத்தம் ஏற்பட்டால் முருகன் உங்களது வேண்டுதலை மனதார ஏற்றுக் கொண்டு பதிலளிக்கிறார் என்று அர்த்தம்.
4. தெய்வ சக்தி இருக்கின்ற வீடுகளில் மட்டுமே பல்லிகள் அதிகம் இருந்து சத்தமிடும். தெய்வ சக்தி இல்லாத வீடுகளில் பல்லிகள் இருக்காது. முருகனை நினைத்து வேண்டும் பொழுது பல்லிகள் சத்தமிட்டால் முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்று அர்த்தம்.
5. முருகனை நினைத்து வேண்டி கொண்டிருக்கும் பொழுதோ அல்லது முருகனின் நாமங்களை பாராயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதோ, முருகன் படத்தில் இருந்து பூக்கள் கீழே விழுகிறது என்றால் முருகன் உங்கள் வீட்டில் எழுந்தருளி இருக்கிறார் என்று அர்த்தம்.
6. நீங்கள் வெளியில் செல்லும் பொழுதோ அல்லது வீட்டில் இருக்கும் பொழுதோ உங்களுக்கு சொந்தம் இல்லாத உயிரினமான மயிலோ அல்லது சேவலோ உங்கள் கண் முன் அடிக்கடி வருகிறது என்றால், முருகனின் துணை உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.
7. முருகனின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்றால் உங்கள் கனவில் அடிக்கடி வேல், மயில், சேவல் இது போன்ற முருகனுக்கு சொந்தமான பொருட்கள் வரும்.
8. நீங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கும் பொழுது உங்கள் கண் முன்னே அடிக்கடி முருகனின் படம் தோன்றுகிறது என்றால், முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்று அர்த்தம்.
9. உங்களுடைய பிரச்சனையை சரி செய்ய நீங்கள் உதவி கேட்காமலேயே ஒருவர் வருகிறார் என்றால், அவர் முருகனின் மறு உருவம் என்று அர்த்தம். உங்களுடைய மன குறை தீர்வதற்கு ஒரு வழி கிடைக்கிறது என்றாலே, முருகனின் துணை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
10. முருகன் உங்களுடன் இருக்கிறார் என்றால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் இல்லாதது போல் விபூதி, சந்தனம் இது போன்ற வாசனை வரும். வீட்டில் மட்டுமல்லாமல் வெளியில் சென்று முருகனை நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் இது போன்ற வாசனை வருகிறது என்றால் முருகன் உங்கள் உடனேயே இருக்கிறார் என்று அர்த்தம்.