தோஷங்கள் விலக எளிமையான பரிகாரங்கள்!

0
170

மனித வாழ்வில் இன்பத்தை மட்டுமே ரசித்து வாழும் வாழ்க்கை எந்த ஒரு மனிதருக்கும் கிடைப்பதில்லை. துன்பமில்லாத மனித வாழ்வு சாத்தியமில்லாதது. ஆனாலும் சில எளிமையான பரிகாரங்கள் மூலமாக நமக்கு நேரும் துன்பத்தின் வீரியத்தை பலமடங்கு குறைத்துக் கொள்ள இயலும். அதில் சில எளிமையான பரிகாரங்கள் தொடர்பாக இங்கே நாம் பார்க்கலாம்.

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்கிறார்கள்.

நாம் செய்யும் காரியங்கள் எந்தவிதமான தடையுமின்றி நடைபெறுவதற்கு துர்க்கையை வழிபடுவது மிகவும் சிறப்பானது. அதுவும் ராகு காலத்தில் செய்யப்படும் துர்கை வழிபாட்டிற்கு பலன் அதிகம் என்று சொல்கிறார்கள். சுமார் 1 1/2 மணிநேரம் கொண்ட ராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரத்தை அமிர்த கடிகை என்று தெரிவிப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை வரும் ராகு காலத்தில் மாலை 4 30 மணி முதல் 6 மணி வரை துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட வேண்டிய காரியங்கள் சுலபமாக நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் 12 மணிவரை தாமரை தண்டை திரியாக போட்டு நெய் விளக்கேற்றி துர்க்கையை வழிபட்டால் செய்த குற்றம், குடும்ப சாபம், உள்ளிட்டவை நீங்கும் என்கிறார்கள்.

ஹஸ்தம் நட்சத்திரமன்று சிவப்பு பட்டுத்துணி சாத்தி சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழம் மாலை சாத்தி குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர மிக விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபட்டால் சங்கடங்கள் தீரும் விநாயகருக்கு ஏற்கும் நிலையில், திரி போட்டு விளக்கேற்றி வைத்தால் வாரிசுகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கடன் பிரச்சினை உள்ளவர்கள் இரட்டை விநாயகர் அருளும் ஆலயங்களுக்கு ரோகிணி நட்சத்திரமன்று சென்று சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.

நவக்கிரகத்தில் உள்ள அங்காரகன் எனும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான், வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் நல்ல வேலை அமையும்.

விபத்துகளிலிருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரமன்று முருகப்பெருமானுக்கு வேலாயுதத்தில் எலுமிச்சை பழத்தை சொருகி வைத்து வழிபடுவதுடன் முருகனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது என்கிறார்கள். ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம், உள்ள இடத்தில் செய்வினை வேலை செய்யாது. ஆகவே வீட்டின் பூஜை அறையில் இந்த பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள் நன்மைகள் வந்து சேரும்.

பஞ்ச கவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளித்து வந்தால் தோஷம், தீட்டு, உள்ளிட்டவை விலகி லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறையும் என்கிறார்கள். தயிர், பால், நெய், கோமியம், சாணம், உள்ளிட்டவற்றை கலந்தது பஞ்சகவ்யகலவையாகும்.

குழந்தை பாக்கியமில்லாதவர்கள் தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் கால பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டால் புத்திர பாக்கியமுண்டு என்கிறார்கள். பெருமாள் கோவிலிலுள்ள கருடாழ்வார் சன்னதியை சுற்றி வந்து நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், உள்ளிட்டவை நீங்கும்.

வறுமையில் இருப்பவர்கள் தானம் கொடுப்பது, பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவி செய்வது, இறந்துபோன ஆதரவற்றவர்களின் உடல் தகனம் செய்ய உதவி செய்வது உள்ளிட்ட மூன்றும் அசுவமேத யாகம் செய்த பலனை கிடைக்கச்செய்யும் என்கிறார்கள்.

எப்படிப்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் சரி ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டத்திலிருந்து நாள்தோறும் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்து வந்தால் போதுமானது உங்களுடைய தோஷங்கள் விலகும்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை குறையும்!
Next articleவிமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இதோ!