தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!!
கம்போடியா நாட்டில் 32வது தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் சிக்சஸ் போட்டி பிரிவில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிக்சஸ் என்ற போட்டிப் பிரிவில் ஒரு அணிக்கு 6 பேர், 6 ஓவர்கள் கொண்ட போட்டியை விளையாடுவது சிக்சஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு அணிகள் பங்கு பெற்றது.
நேற்று அதாவது மே 14ம் தேதி தனது முதல் போட்டியில் பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணி தோல்வி பெற்றது. அதே நாள் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தோனேசியா அணியை 14 ரன்கள் வித்தியாசத்திலும், இன்று நடைபெற்ற போட்டியில் கம்போடியா அணியை 26 ரன்கள் வித்தியாசத்திலும் சிங்கப்பூர் அணி தோற்கடித்தது.
கம்போடியா மற்றும் சிங்கப்பூர் இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றது. இதையடுத்து அதிகபட்சமாக ரன்கள் அடித்ததை மையமாக வைத்து அதில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது. அதிக ரன்கள் அடித்ததில் சிங்கப்பூர் அணி முன்னிலை பெற்றதால் சிக்ஸஸ் போட்டிப் பிரிவில் சிங்கப்பூர் கிரிக்கெட் அணி தங்கத்தை வென்றது.
இதற்கு முன் நடந்த 50 ஓவர் போட்டி பிரிவிலும், டி20 போட்டி பிரிவிலும் கம்போடியா அணி தங்கம் வென்றது. இதில் சிங்கப்பூர் அணிக்கு டி20 போட்டிகளில் வெண்கலம் கிடைத்தது. டி10 கிரிக்கெட் பிரிவில் வெண்கலம் பதக்கம் வெல்வதற்கு சிங்கப்பூர் அணியும் பிலிப்பைன்ஸ் அணியும் நாளை அதாவது மே 16ம் தேதி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.