தற்போது வரையில் எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று மாலை பத்திரிகையாளர்களை தன்னுடைய வீட்டில் சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை முதலமைச்சர் பதவிக்கு அதிகாரமில்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதன் காரணமாக, அதனை ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது அதனை வேறு யாருக்கும் கொடுக்க நினைத்தால் அது அவருக்கு செய்யும் துரோகம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் உரையாற்றிய ஏதாவது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயாவுக்கு மட்டுமே உரித்தானது. அது அவருக்கு மட்டுமே சொந்தமானது, 30 வருடங்கள் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி அவருக்கு மட்டுமே சொந்தமானது என்று நானும், எடப்பாடி பழனிச்சாமியும் முடிவு செய்தோம் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆட்சி எந்தவிதத்திலும் பறிபோய் விடக்கூடாது என்று நானும், எடப்பாடி பழனிச்சாமியும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று நாங்கள் ஒன்றாக இணைந்தும் 6 வருட காலமாக எந்த விதமான பிரச்சனையும் இல்லை. துணை முதலமைச்சர் பதவிக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும்.
ஆனால் இருந்தாலும் கட்சியின் நன்மைக்காக பிரதமர் கேட்டுக் கொண்ட காரணத்தால், நான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.
அனைத்தும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது ஏன் திடீரென்று என்ற ஒற்றை தலைமை என்ற குழப்பம் வந்தது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிப்பதற்காக மாதவரம் மூர்த்தி எடப்பாடி பழனிச்சாமி தான் அழைத்து வந்தார். அவர் தான் முதன்முதலாக ஒற்றை தலைமை என்று தொடங்கினார் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவிற்கு இரட்டை தலைமை சரியானதுதானா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுப்பியபோது,
இன்றைய காலகட்டத்தில் இரட்டை தலைமை நன்றாகத்தான் செல்கிறது. ஒற்றை தலைமை பொதுச்செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க நினைத்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று தெரிவித்தார் ஓபிஎஸ்.
அம்மா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே அவர் மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் அவருக்கு மட்டுமே அந்தப் பதவி உரித்தானது என்று தெரிவித்துள்ளார்.
அதோடு அனைத்து விதமான உட்கட்சி தேர்தலை நடத்தி தனது தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இப்படி ஒரு குழப்பம் தேவைதானா? என்று பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு நானும், எடப்பாடி பழனிச்சாமியும், எந்தவித பிரச்சினையுமின்றி ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
14 மூத்த அதிமுக உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கட்சியில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் இறுதியாக என்ன முடிவு செய்கிறார்களோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார்.
நான் இதுவரையில் அனைத்தையும் விட்டுக்கொடுத்ததற்கு காரணம் தொண்டர்கள் தான். தற்காலிக ஏற்பாடாக மட்டுமே கட்சியை வழி நடத்துவதற்கு மட்டுமே சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.
அதோடு தனக்கு எதிராக கட்சியில் எந்த விதமான குழுவும் செயல்பட்டு வருகிறது என்று நான் எப்போதும் நினைத்ததில்லை.
அதிமுகவிலிருந்து யாராலும் என்னை ஒதுக்கி வைக்க முடியாது, நான் தொண்டர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், இந்த ஒற்றை தலைமை பிரச்சனை எனக்கு மிகப்பெரிய வருத்தம் தருகிறது என்றும், அவர் கூறியிருக்கிறார்.
அதோடு 14 பேர் கொண்ட உயர்மட்டக்குழு என்ன சொல்கிறதோ அதற்கு நான் தலைவணங்குகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். 23-ஆம் தேதிக்குள் சுமுகமான முடிவு மேற்கொள்ளப்படும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.