நேருக்கு நேர் படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் சூர்யா. இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. 18ம் தேதியான நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது. டிரெய்லர் முழுக்க சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. கங்குவா படம் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்த நிலையில் ரெட்ரோ படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ரெட்ரோ டிரெய்லர் வீடியோ சூர்யா ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய விழாவில் பேசிய சூர்யாவின் அப்பா சிவக்குமார் ‘சூர்யாவுக்கு 17 வயதில் இருக்கும்போது அவர் கலைத்துறையில் பெரிய ஆளாக வருவார் என ஒரு ஜோதிடர் சொன்னார். எந்த துறையில் எனக்கேட்டேன். முகத்தை வைத்து செய்யும் தொழில் என்றார். ‘நடிகனாக வரப்போகிறானா?’ எனக்கேட்டேன் ‘ஆமாம்’ என்றார். காலையில் இருந்து இரவு வரை 4 வார்த்தைதான் பேசுவான். அவன் எப்படி நடிகனாவான்?. உனக்கென்ன பைத்தியமா?’ எனக்கேட்டேன். அதற்கு ‘உங்களை விட நல்ல நடிகர் என அவர் பேர் வாங்குவார்’ என அந்த ஜோதிடர் சொன்னார். அது அப்படியே நடந்துவிட்டது’ என சொல்லியிருக்கிறார்.