அருந்ததி , ஒஸ்தி ஆகிய தமிழ் படங்கள் மற்றும் பல மொழிகளில் வில்லனாக நடித்த சோனு சூட் சமீப காலமாக மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த உதவிகள் பலரால் பாரட்டப்பட்டு வருகிறது.
புலம் பெயர் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது கஷ்டத்தில் உள்ள பலருக்கும் உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளார்.
அனைவரும் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பொழுதுபோக்காக கடந்து செல்லும் சமயத்தில் சோனு சூட் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறி அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் தக்காளி விவசாயி ஒருவர், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார். உழுவதற்கு, எருதுகளை வாடகைக்கு எடுக்க கூட பணமில்லாத அவர் தன் சொந்த மகள்களை எருதுகள் போல ஏர்பூட்டி உழுத காட்சி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.அவரது மகள்கள் வயலில் கலப்பையை இழுத்துக் கொண்டு நிலத்தை உழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
பலரும் விவசாயி மற்றும் மகள்களின் நிலை குறித்து வேதனை தெரிவித்தனர்.பலர் இதை கொடுமையான செயல் என விமர்சித்த வண்ணம் உள்ளனர் .இதற்கிடையே இந்த காட்சியை சமூக வலைதளங்களில் பார்த்த நடிகர் சோனு சூட், விவசாயியின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து டிவிட்டர் ஒன்றில் சோனு சூட் ” நாளை காலை அவரின் வீட்டில் எருதுகள் நிற்கும்” “விவசாயிகள் நாட்டின் பெருமை”. “பெண் பிள்ளைகள் நீங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்” என பதிவிட்டிருந்தார்.
திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த ட்விட்டில் ” நீங்கள் எருதுக்கு தகுதியானவர்கள் அல்ல டிரேக்டருக்கு தகுதியானவர்கள் நாளை காலை டிராக்டர் உங்கள் வீடு வந்து சேரும்” என பதிவிட்டிருந்தார்.
வேடிக்கை பொருளாக மாறிய சமூக வலைதளங்களில் சோனு சூட் போன்ற நல் உள்ளங்கள் மற்றும் பிறர்க்கு உதவி செய்யும் அவரின் மனப்பான்மை நிஜ ஹீரோவாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது..