முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்… மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணி ரசிகர்கள்… 

0
32

 

முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்… மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணி ரசிகர்கள்…

 

மகளிர் அணிக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடத்தும் ஃபிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நியூசிலாந்தில் நடைபெற்றது.

 

முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியும், ஸ்வீடன் மகளிர் கால்பந்து அணியும் மோதியது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்து வந்த நிலையில் ஆட்டத்தின் முதல் அரையிறுதி கோல்கள் இன்றி முடிந்தது.

 

இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணியும் ஸ்வீடன் அணியும் கோல் அடிக்க முயற்சி செய்து வந்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக கஷ்டப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்தது. பின்னர் ஸ்வீடன் அணி ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தது.

 

போட்டி முடிய இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இதனால் கூடுதல் நிமிடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்து ஸ்வீடனுக்கு அதிர்ச்சி அளித்தது.

 

இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2 கோல்கள் அடித்து ஸ்வீடன் அணியை விட ஒரு கோல் முன்னிலையில் இருந்ததால் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

 

மேலும் முதல் அரையிறுதிப் பேட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.