இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதோடு உணவு பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது.
பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. நாள்தோறும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு நகரில் இருக்கின்ற அதிபர் மாளிகை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறிவிட்டதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதோடு அங்கிருக்கின்ற ராணுவ காவல் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு உண்டானது. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணத்திலும் நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது என்று காவல்துறை மூத்த தலைவர் அஜித் ரோகன தெரிவித்திருக்கிறார்.
போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இலங்கையில் அவசரநிலைப் பிரகடனத்தை அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருக்கிறார்.