பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை நாட்டில் அந்த நாட்டின் அரசாங்கத்தின் மீது மிகுந்த கோபமடைந்த பொதுமக்கள் கடந்த 9ம் தேதி மிகப் பெரிய புரட்சியில் ஈடுபட்டார்கள்.
அதிபர் மாளிகை அதிபர் அலுவலகம் பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை சூறையாடி அங்கேயே சில நாட்கள் போராட்டக்காரர்கள் தங்கி இருந்தார்கள்.
அதன் பின்னர் அந்த கட்டிடங்களிலிருந்து படிப்படியாக போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு கூட போராட்டக்காரர்களில் ஒரு சிலர் அந்தப் பகுதியிலேயே தங்கி இருந்தார்கள். ஆனால் ராணுவம் அவர்களை சமீபத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
அத்துடன் அலுவலகம் அருகே போடப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரமும் பிரித்து எறியப்பட்டனர். இதன் காரணமாக, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர், 9 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இது உலக நாடுகளின் கண்டனத்தை பெற்று இருக்கிறது அதிலும் குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் இதனை அதிபர் ரனில் விக்ரமசிங்கே நிராகரித்திருக்கிறார். போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அதிபர் அலுவலகத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதோடு அங்கே சேதமடைந்த பொருட்களின் விவரங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்திருக்கிறார்கள்.
இதனையடுத்து அதிபர் அலுவலகம் இன்று மறுபடியும் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேப்போல போராட்டக்காரர்கள் வசம் சென்ற மற்ற அலுவலக கட்டிடங்களையும் சுமூகமாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.