நம்மைப் போலவே ஒரு மானுடனாக அவதாரம் செய்து ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பானோ அத்தையே துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, அந்த துன்பங்களில் இருந்து எப்படி நிவர்த்தி அடையலாம் என்பதை தத்ரூபமாக நமக்கு நிகழ்த்தி காட்டியதனால் தான், ராம அவதாரத்தின் மேல் நமக்கு மிகப்பெரிய பற்று உள்ளது.
ராமனுடைய சிறப்புகளையும், ராமர் இந்த உலக மக்களுக்காக எப்படி வாழ்ந்து காட்டினார் என்கின்ற வாழ்க்கை வரலாற்றையும் மிக அழகாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சரித்திரம் என்றால் அது கம்பர் எழுதிய கம்பராமாயணம்.
இப்படிப்பட்ட ராமனை ஆண்டுதோறும் நாம் கொண்டாடி மகிழக்கூடிய அந்த அழகான திருவிழா தான், ஸ்ரீ ராம நவமி திருவிழா. இந்த ஸ்ரீராம நவமி குழந்தைக்காக காத்திருக்கக் கூடிய நபர்களுக்கு ஒரு பொக்கிஷமான நாள் என்றே கூறலாம்.
ஏனென்றால் தசரத சக்கரவர்த்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்து, அந்த தவத்தின் பலனால் தான் ஸ்ரீ ராமரை பெற்று எடுத்தார். இதனைப் போன்று தான் பல ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருப்பவருக்கு இந்த நாள் ஒரு வரமான நாள் ஆகும்.
முந்தைய காலத்தில் இராமாயணத்தை கந்த சேர்வையாக படித்து குழந்தை பாக்கியத்தை பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உண்டு. அதேபோன்று இந்த ராமநவமி அன்று விரதம் இருந்து ராமருடைய கருணையினால் குழந்தை பேறு பெற்றவர்களும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் உள்ளனர்.
இந்த அழகான ராம நவமியை நாம் என்றைக்கு கொண்டாட வேண்டும்? அதற்கான நேரம் என்ன? எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது காண்போம்.
இந்த ராம நவமி 6.4.2025 அன்று அதிகாலை 01:08 மணி முதல் 7.4.2025 அதிகாலை 12:25 மணி வரை அமைந்திருக்கிறது. அதேபோன்று புனர்பூசம் நட்சத்திரம் 5.4.2025 காலை 10:48 மணி முதல் 6.4.2025 காலை 10:31 மணி வரை இருக்கிறது.
ஸ்ரீ ராமர் அவர்கள் புனர்பூசம் நட்சத்திரம், நவமி திதியில் தான் இந்த பூமியில் அவதாரம் புரிந்தார். இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாளான ஞாயிற்றுக்கிழமை அதாவது 6.4.2025 காலை 10:31 மணி வரை இருக்கிறது. எனவே ராமரை வழிபடுவதற்கு காலை நேரம் மிகவும் சிறப்பானது.
இந்த இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:00 மணி முதல் 10:20 மணி வரை ராமரை வழிபாடு செய்து கொள்ளலாம். மாலை நேரத்தில் வழிபாடு செய்ய நினைப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து கொள்ளலாம்.
எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் காலை நேரத்தில் செய்வது சிறப்பானதாக இருக்கும். எனவே முடிந்தவர்கள் காலை நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்வது மேலும் சிறப்பை தரும். ஏனென்றால் குழந்தைகளுக்கும் இறைவழிபாட்டை பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும்.
குழந்தை பாக்கியத்திற்காக இந்த வழிபாட்டை செய்பவர்கள் காலையில் இருந்து விரதம் இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்யலாமா? என்றால் செய்யலாம். ஒருவேளை இந்த வழிபாட்டின் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் நாட்களாக இருந்தாலும் செய்து கொள்ளலாம். ஆனால் பூஜை அறைக்குள் செல்லாமல்.
ஸ்ரீ ராமரின் படம் வீட்டில் இருந்தால் அந்த படத்திற்கு துளசி மாலை அல்லது ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதின மாலை, போன்ற ஏதேனும் ஒன்றை மாலையாக சூட்டிக் கொள்ளலாம். இந்த வழிபாட்டின் பொழுது துளசி தண்ணீர் மற்றும் ராமருக்கு மிகவும் பிடித்தமான பால் பாயாசம் போன்றவற்றையும் வைத்துக் கொள்ளலாம்.
இதனை செய்ய முடியாதவர்கள் பழங்களை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். ராமரின் அற்புதமான நாமம் ஆகிய “ஸ்ரீ ராம ஜெயம்” என்பதை 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாமத்தை நாம் கூறும் பொழுதே நமக்குள் ஒரு அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி என்பது கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு நாமத்தை கூறிய பிறகு தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். “ராமா ராமா ராமா” என்று மூன்று முறை கூறினாலே, ஆயிரம் நாமங்களினால் நாம் நாராயணரை அர்ச்சனை செய்த பலன் நமக்கு கிடைக்கும் என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது.
“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!”