இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே கொதித்தெழுந்த இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் மாளிகையில் நுழைந்த அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் விதத்தில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருக்கின்றன. இலங்கையில் வருகின்ற 20ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதிபர கோத்தபய ராஜபக்சே இன்று பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, அதிபர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூலை மாதம் 19ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆனாலும் கூட கோத்தபய ராஜபக்சே சிறப்பு விமானப்படை விமானம் மூலமாக இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.
கொழும்புவிலிருக்கின்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கோத்தபய ராஜபக்சே, அவருடைய மனைவி, மெய் காவலர் உள்ளிட்ட 4 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமலே இலங்கையை விட்டு மாலத்தீவுகளுக்கு கோத்தபய ராஜபக்சே தப்பிச்சென்ற நிலையில், இலங்கையில் போராட்டம் நீடித்து வருகிறது.
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து அங்கே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.