பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை, அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதத்தில் எந்த வகையிலும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது .
பள்ளியில் சில ஆசிரியர்கள் மாணவர்களை வீட்டுப்பாடம் சரியாக செய்து வரவில்லை, போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து அடிப்பதும், கீழ்த்தரமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜெகதீஷ் அதே ஊரிலுள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு படித்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அந்த மாணவன் வீட்டின் கதவை பூட்டி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கேள்வியுற்ற உசிலம்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதன் பின்னர் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.