உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள்1000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்! இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே தொடர்ந்து 5வது நாளாக போர் நீடித்து வருகிறது.இந்த நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபை வேண்டுகோள் விடுத்ததை ஏற்க மறுத்த ரஷ்யா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் ரஷ்யப் படைகளை திரும்பப் பெற்று விடுங்கள் என்று ரஷ்யாவிற்கு எச்சரிக்கை செய்தார்.

அமெரிக்கா, உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், உக்ரைன் அதிபரை நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள் என்று பணித்தது. ஆனாலும்கூட அவர் நாட்டை விட்டு வெளியேற தயாராகவில்லை தாங்கள் எனக்கு உதவி புரிய வேண்டுமென்றால் ராணுவத் தளவாடங்களை எங்களுக்கு வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தார் உக்ரைன் அதிபர்.

தொடக்கத்தில் நாங்கள் தனியாக போரை எதிர்கொண்டு வருகிறோம் என்று வருத்தத்துடன் உரையாற்றிய உக்ரைனின் அதிபரின் பேச்சு பலரையும் கலங்கடித்தது.

இதனால் அமெரிக்கா உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை வழங்கத்தொடங்கியது. அதோடு போர் நிவாரண உதவியும் அமெரிக்காவின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் துவக்கத்தில் அந்த நாட்டிற்கு ஆதரவளித்த நாடுகளுக்கு ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோடிஜியா நகரிலிருந்து 1400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேறும் நடவடிக்கை தூதரக அதிகாரிகள் உதவியுடன் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் இதில் 400 மாணவர்கள் தொடர் வண்டிகள் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தலைநகர் கீவிலிருக்கின்ற இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது வார இறுதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் அனைத்து மாணவர்களும் மேற்குப் பகுதிகளுக்கு பயணம் செய்ய தொடர்வண்டி நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் நாட்டை சார்ந்த ரயில்வே நிர்வாகம் சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கி வருகிறது, ஆகவே தொடர்வண்டி நிலையங்களில் ஒரு பெரிய கூட்டம் காணப்படும் என்ற காரணத்தால், அனைத்து இந்திய மாணவர்களும் பொறுமையாக இருக்க வேண்டும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்கள் விசா, பணம், உணவு குளிர்கால ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எப்பொழுதும் உங்களுடைய உடைமைகள் தொடர்பாக கவனத்துடன் இருங்கள் என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான அனைத்து உதவிகளையும் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் வழங்கி வருவதாக உக்ரைன் தூதர் தெரிவித்திருக்கிறார்.