TVK: அடுத்த 2 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனவும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக ஆட்சி கட்டிலை பிடிக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து முதல்வர் இருக்கையில் அமர வேண்டுமென போராடி வருகிறது.
இவ்வாறான சமயத்தில் கரூரில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ அடுத்ததாக விஜய்யிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக விஜய் இன்று டெல்லி புறப்பட்டுள்ளார். ஒன்றரை வருடத்திற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்ததிலிருந்தே தவெகவுக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் சந்திப்பை தொடங்கிய விஜய் 6 வதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், சில போரட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை விசாரித்த நிலையில் தற்போது கட்சி தலைவர் விஜய்யையும் விசாரிக்க இருப்பதால், விஜய் இன்று காலை 6 மணியளவில் தனது தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் களத்தில் விஜய்யின் அரசியல் வருகை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கரூர் விவகாரம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.