ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று?

Photo of author

By Hasini

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று?

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான்கள் போர் செய்தனர். அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்கள் முழுவதையும் தலிபான்களின் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அவர்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். போதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு மட்டும் இதுவரை 5 வயதுக்குட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யூனிசெப் அமைப்பும் அதிர்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

அந்நாட்டில் காபுல் நகரில் பி.டி.13 என்ற பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று முன்தினம் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதே போன்று நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் தலிபான்களை இலக்காக வைத்து அடுத்தடுத்து பல குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.

இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 21 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். மொத்த உயிரிழப்புகளில்  3 பேர் பொதுமக்கள் என்றும், மற்றவர்கள் தலிபான்களின் போராளிகள் என்றும் அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்நாட்டில் தலிபான்கள் பொறுப்பேற்ற பின்பு நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டு வெடிப்பு இதுவாகும். இதற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரில் நேற்று மாலை தலிபான்கள் சென்ற வாகனம் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதிலும் ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளது. இதில் தலிபான் இயக்க உறுப்பினர் உட்பட 2 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கும் இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பொது மக்களின் வாழ்வு மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என தலிபான்கள் ஆட்சி அமைக்கும்போது உறுதி அளித்திருந்த பட்சத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது அனைவரையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சங்கடமான சூழ்நிலைகள் எல்லாம் எப்போது முடியும் என்றும் பலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். நாமும் காத்திருப்போம்.