ஒரு ஆண்டில் பல பண்டிகை நாட்களையும், விரத நாட்களையும் கொண்டாடி வருகிறோம். அதில் குறிப்பாக பெண்கள் மட்டும் வழிபடக்கூடிய விரத நாட்கள் எனவும் சில விரத நாட்கள் இருக்கின்றன. தீர்க்க சுமங்கலி என்ற வரம் பெற வேண்டும், தன்னுடைய கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் எனவும் வழிபடக்கூடிய விரத நாட்களுள் மிகவும் முக்கியமான விரத நாள் தான் இந்த காரடையான் நோன்பு.
சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் எனவும் இதனை கூறுவர். எமனோடு போராடி தன் தாலி பாக்கியத்தை காப்பாற்றி, சத்தியவானின் உயிரை மீட்டுக் கொண்டு வந்து, மீண்டும் அவர் இழந்த ராஜ்யத்தில் ராஜாவாக அமரச் செய்து, சுமங்கலியாக இருந்து இந்த உலக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு அற்புதமான முன் உதாரணமாக திகழ்ந்தவர் தான் சாவித்திரி தேவி. இந்த சாவித்திரி தேவியின் நோற்ற விரதம் தான் இந்த காரடையான் நோன்பு.
மேலும் இந்த விரதத்தின் பலனால் தான், இறந்த தன் கணவனை சாவித்திரி தேவி மீட்டு கொண்டு வந்தாள். இந்த காரடையான் நோன்பு என்பது மிகவும் எளிமையான நோன்பு தான். திருமணம் ஆன பெண்கள் தனது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டும் எனவும், திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் எனவும் இந்த விரதத்தினை மேற்கொள்ளலாம். இந்த விரத முறையானது இன்று அதாவது 14.3.2025 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விரதத்திற்கான கணக்கு முறையானது மாசி மாதத்திற்கான கடைசி நாளும், பங்குனி மாதத்திற்கான முதல் நாளும் என்று கூடுகிறதோ அன்றைய நாள் தான் இந்த காரடையான் நோன்பு முறை என்று கூறி செயல்படுத்தப்படுகிறது. இந்த நோன்பிற்கு அரிசி மாவு, காராமணி, வெல்லம் இதனை பயன்படுத்தி இனிப்பு அடையும் காராமணி, அரிசி மாவு, உப்பு இதனை சேர்த்து கார அடையும் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு தாலி கயிறு ஒன்றை கழுத்திலும் போட்டுக் கொள்ளலாம் அல்லது கையிலும் கட்டிக் கொள்ளலாம். இது அவரவர் விருப்பம்.
நெய்வேத்தியம் செய்வதற்கு வாழை இலை பயன்படுத்தினால் நான்கு இலை போட வேண்டும். தாம்பூலமாக இருந்தால் ஒன்று போதும். இவ்வாறு தாம்பூலத்தில் வைக்கும் பொழுது ஒரு தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், உருகாத வெண்ணெய், நாம் செய்த அடை ஆகியவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
இவற்றை நெய்வேத்தியமாக வைத்து, தேங்காய் உடைத்து, தீப தூப ஆராதனை காட்டி நமது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். அதில் காமாட்சி அம்மனாக இருந்தால் மிகவும் விஷேசம். அடுத்ததாக நமது வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு இது போன்ற மங்களப் பொருட்களை கொடுக்க வேண்டும்.
நெய்வேத்திய தட்டில் வைத்த நாம் மாற்றிக் கொள்ளக்கூடிய தாலிக்கயிறை, வயதான சுமங்கலிகளின் கையினால் அல்லது நமது கணவனின் கையினால் மாற்றிக் கொள்ளலாம்.
“உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்”
நமது வழிபாட்டின் போது இந்த எளிமையான மூல மந்திரத்தை கூறிக் கொள்ளலாம். காலை நேரத்தில் வழிபடக்கூடியவர்கள் 6 மணி முதல் 7:50 மணி வரை வழிபட்டுக் கொள்ளலாம். அதன் பிறகு 9:30 மணி முதல் 10:20 மணி வரை வழிபட்டுக் கொள்ளலாம். இந்த வழிபாட்டு நேரத்தில் தாலி கயிறையும் மாற்றிக் கொள்ளலாம்.