
ADMK TVK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் அதிமுக-திமுகவிற்கு தான் கடுமையான போட்டி நிலவும். அதிலும் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்தில் அதிமுக கட்சி தான் திமுகவை விட ஒரு படி மேல் இருந்தது. அப்போது உட்கட்சி பூசலும் அந்த அளவுக்கு இல்லை, அப்படி இருந்தாலும் அதனை சரி செய்து மீண்டும் இணைக்கும் பக்குவம் முன்னாள் தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் அதிமுக கட்சி அப்படி இல்லை.
திராவிட கட்சி என்று பெயருக்கு சொல்லிக் கொண்டு கூட்டணி கட்சிகளையே முழுமையாக நம்ப வேண்டியிருக்கிறது. மேலும் அதிமுகவின் உள்வட்டாரத்திலும் சற்றும் ஒற்றுமை இல்லை. இந்த இக்கட்டான நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க துடித்து வருகிறார். இது ஒரு புறம் வெற்றி பெறுவதற்கான வியூகமாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு புறம், அதிமுகவிற்கு அதன் பாரம்பரிய வாக்குகள் சிதைய தொடங்கியுள்ளன.
இந்த வாக்குகள் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அதனை காப்பாற்றி கொள்ள விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்று வருகிறது. மேலும் விஜய்யின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களான செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் போன்றோரின் ஆதரவாளர்களின் வாக்குகளையும் விஜய் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பதே இபிஎஸ்யின் குறிக்கோள் ஆகும்.
கரூர் விவகாரத்திற்கு இபிஎஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது எல்லாம் அவருக்கு உதவுவதற்கு அல்ல. அதிமுகவிற்கு தற்போது இருக்கும் வாக்கு வங்கியையாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அப்படி செய்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற முடியும் என்பது அதிமுக தலைவர்களின் கருத்து என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.