ADMK BJP: கடந்த சில நாட்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில், ஓ.பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி 10 நாட்கள் காலக்கெடுவை எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்தார். இதனால் கோபமடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.
அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்துள்ளார். அண்மையில் செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து செய்தியாளரால் கேள்வி எழுப்பட்ட போது, நான் யாரையும் சந்திக்க டெல்லி செல்லவில்லை, இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன.
அதனால் மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்வதாகக் கூறினார். இந்நிலையில், செங்கோட்டையன் அமித்ஷாவை நேரில் சந்தித்தது, அ.தி.மு.க-பாஜக கூட்டணியில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் கூட செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தன்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றும் அறிவித்திருந்தார்.
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பா.ஜ.க தரப்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு அ.தி.மு.க வில் பிரிந்த அணிகளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் பா.ஜ.க ஆதரவு தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில் செங்கோட்டையன் மீண்டும் பதவி வகிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து கூறுகின்றன. இது அ.தி.மு.க-வுக்குள் புதிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.