
தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பதவி நீக்க அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரே வாரத்தில் முதன்மை கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக அதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை அனைவராலும் அறியப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதாலும், தலைமைக்கு எதிராக பேசியதாலும் பதவியில் இருந்து நீக்கினோம் என்று இ.பி.எஸ் கூறினார். அவரது பதவி பறிப்பு அ.தி.மு.க-வில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டு பதவி நீக்கு அறிவிப்புகளும் வெளியான நிலையில், அதன் சூடு கூட தணியாத நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை நீக்கி உள்ளார். பாமக-வில் அன்புமணிக்கும் அவருடைய தந்தை ராமதாசுக்கும் இடையே தலைமை போட்டி நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலை அரசியலில் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அன்புமணி தனிக்கட்சியாக செயல்படுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட 16 ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டுகளுக்கு கெடு விதித்திருந்தும், அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காததுமே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் பாமக-வில் பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? தனது கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்களா? இல்லை தனித்து செயல்படுவார்களா, அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரே வாரத்தில் பல கட்சிகளில் பதவி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால் இது சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.