தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ததற்கான வாய்ப்பு உள்ளது.
அதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு குமரி கடல், தென்மேற்கு, வங்க கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இப்படியான நிலையில், தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பருவமழை காலத்தில் வழக்கத்தை விட 106 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கணினி அடிப்படையிலான கணக்கீட்டின்படி இந்த மாத இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் 20ம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் பரவலாக மழைப்பொழிவு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதற்கு நடுவே சென்னையில் நேற்று இரவு பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், மெரினா சாலை போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல புறநகர் பகுதியான அம்பத்தூர், பாடி மண்ணூர்பேட்டை, கொரட்டூர், முகப்பேர், ஆவடி, கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.