DMDK ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தேர்தல் வியூகங்களிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நேரில் சந்தித்துப் பேசினார்.
இவர்களின் இந்த சந்திப்பு கூட்டணிக்காக அச்சாரம் என்று பேசப்பட்ட சமயத்தில் தற்போது திடீர் திருப்பமாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு இணையாக தேமுதிகவும் மக்களை சந்திக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வரும் பரப்புரை, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போது அதில் பேசிய அவர், SIR மூலம் உங்கள் வாக்குகள் திருடப்படுவதாக தகவல் வந்தது, அதனால் ஒவ்வொரு தனி நபரும் சென்று உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள். அதை திருடும் உரிமை இந்த உலகத்தில் எவனுக்கும் இல்லை.
ஜனநாயக நாட்டில் நம்முடைய ஓட்டுரிமையை உறுதி செய்வது நம்முடைய கடமை என்று கூறினார். தற்சமயம் திமுக SIR யை தீவிரமாக எதிர்த்து வருகிறது, அதனால் இவரின் இந்த கூற்று திமுகவிற்கு ஆதரவாக உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக-தேமுதிக கூட்டணி உருவாகுமென்று நினைத்த பட்சத்தில் பிரேமலதாவின் இந்த பேச்சு இவர் திமுக பக்கம் தாவுவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு விஜய் மறுத்ததால் ஏமாற்றத்தில் இருந்த இபிஎஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து அதனை சரி கட்டி விடலாமென்று நினைத்தார். ஆனால் தற்போது பிரேமலதாவின் இந்த நகர்வு இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

