மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சேவையை வழங்கும் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வழங்க வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த நிறுவனங்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன.
தகவல் தொடர்பு சேவையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை அறிமுகமான பின்னர் இந்திய தகவல் தொலைத் தொடர்பு துறையில் கடுமையான போட்டி உருவானது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவைக்கான கட்டணங்களை போல மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபட்டன.
இதனால் ஏற்கனவே சேவையை வழங்கி வந்த வோடபோன், ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுக்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன.
இந்நிலையில் இந்த தொகையானது தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படும் அலைக்கற்றை உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதை சற்றும் எதிர்பார்க்காத வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டன என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக கடந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் நிதிநிலை மிக மோசமான அளவை எட்டியது என்று கூறப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களால் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்றும், மேலும் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. ஆனால் இந்த தொகை செலுத்தக் கூடிய அளவில் இருந்தும் அதனை நிறுவனங்கள் செலுத்தவில்லை என்று அரசு தரப்பு கூறுகிறது.
கடந்த 2018-19– நிதியாண்டில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ.37,000 கோடி. இதில் அரசு கேட்கும் தொகைக்காக தனியாக ரூ.18,470 கோடியையும் இந்த நிறுவனம் ஒதுக்கியிருந்துள்ளது. எனவே அரசுக்குச் சேர வேண்டிய தொகையை செலுத்தக் கூடிய நிலையில் இருந்தும் அதை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறது.
இதை போலவே பார்தி ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.6,164 கோடி, ஆனால் அதை முறையாக சரியான நேரத்தில் செலுத்தாததினால் வந்த வட்டி, அபாரதம், அபராத வட்டி என்று ரூ.22, 286 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய இறுதித் தொகை தற்போது ரூ.28,450 கோடியாக உள்ளது. ஆனால் பார்தி ஏர்டெல்லின் கடந்த 2018-19 ஆம் ஆண்டிற்கான மொத்த ஆண்டு வருவாய் சுமார் ரூ.50,000 கோடியாக இருந்தும் இந்த நிறுவனமும் இழுத்தடித்து வருகிறது. இந்த நிறுவனங்களை போல ஜியோ நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை 6,670 கோடி ரூபாயாகும். மொத்த தொகை சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்தது போலவே இந்த தொகையை செலுத்த மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன.
இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் இவ்வாறு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.