TVK COMMUNIST BJP: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாக மாற்றி, இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் தற்போது வரை இதில் உறுதியாக உள்ளார். ஆனால் திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு பாஜகவை விஜய் விமர்சிப்பது இல்லையென்ற கருத்தும் மேலோங்கி இருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய் தனது பிரச்சாரம், அறிவிப்புகள் என அனைத்திலும் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை மத்திய அரசு என்றும், மறைமுகமாகவும் விமர்சிப்பதை விஜய் வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக விஜய் பாஜகவின் பி டீம் என்றும் அழைக்கப்பட்டார். இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு, தவெக ஈரோட்டில் நடத்திய பரப்புரையில் பேசிய விஜய், திமுக ஒரு தீய சக்தி என்று பலமுறை கூறியிருந்தார். ஆனால் பாஜகவை விமர்சிப்பதற்கு நேரமில்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று மறைமுகமாக கூறியிருந்தார்.
இவ்வாறான சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பாஜக தான் உண்மையான தீய சக்தி. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை தீய சக்தி என்று சொல்ல விஜய்க்கு தைரியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை சொல்வதற்கு தயங்கும் விஜய் மத ரீதியான அரசியலை ஆதரிக்கிறார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.