இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!

Photo of author

By Sakthi

இனி மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை ரசிக்கலாம்! சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்த சூப்பர் ஏற்பாடு!

Sakthi

மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த வாழ்வாதாரத்தை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வருடந்தோறும் டிசம்பர் மாதம் 3ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க பொருத்தமாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தற்காலிக நடைபாதையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று மாலை திறந்து வைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் இருக்கின்ற மெரினா கடற்கரைக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் எளிதாக கடற்கரைக்குச் சென்று கடல் அலைகளை அருகிலிருந்து கண்டுகளிக்க வசதியாக கடற்கரை சர்வீஸ் சாலையில் இருந்து கடற்கரை வரையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மரப்பலகையில் ஆன தற்காலிக பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கடற்கரைக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக மணற்பரப்பில் இயங்கக்கூடிய ஐந்து சக்கர நாற்காலிகள் மாநகராட்சி சார்பாக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வெடுக்க சாமியான்களும், அவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு உள்ளிட்டவையும் செய்யப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி வருகின்ற ஜனவரி மாதம் 3ம் தேதி வரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு உரையாற்றும்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி மாதம் 16 ஆம் தேதி வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக பாதையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டசபை உறுப்பினர், நகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் எம்.எஸ். பிரசாந்த், தலைமை பொறியாளர் எஸ். ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர் என்று தெரிகிறது. மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.