மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்!

Photo of author

By Hasini

மருத்துவமனையில் நடந்த பயங்கர தீ விபத்து! 58 பேர் உடல் கருகிய பரிதாபம்!

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஈராக் இப்போது திகழ்கிறது. அங்கு இதுவரை 14 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றின் காரணமாக சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஈராக்கின் தென்கிழக்கு பகுதி நசிரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 70 படுக்கை வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. இந்த வார்டில் நோயாளிகள் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து, தீ சற்று நேரத்தில் மருத்துவமனை முழுவதும் பரவியது.

இதனால் செய்வதறியாது திகைத்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால், பலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனங்களில்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 58 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என கூறி மருத்துவமனையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இருந்த மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களை தீவைத்து எரித்ததன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் காரணமாக இந்த தீ விபத்து தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் அல் காதிமி, மருத்துவமனையின் தலைமை நிர்வாகி, மாகாண சுகாதார இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமரின் உத்தரவின் பேரில் இந்த தீ விபத்து குறித்து அரசு விசாரணை தொடங்கியுள்ளது.

ஈராக்கில் இந்த ஆண்டு மருத்துவமனையில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய தீ விபத்து இது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 82 நோயாளிகள் உடல் கருகி பலியான விபத்தும் நினைவுகூரத் தக்கது என்றும் கூறியுள்ளார்.