கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வாகனம் வெடிகுண்டு தாக்குதல் போல, நேற்று நடந்த மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை ஒட்டிய புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தினர் சென்ற வாகனத்தின் மீது வெடிமருந்து நிரப்பிய தீவிரவாதிகளின் வாகனம் மோதியதில் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர், மேலும் அந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவத்தினர் அழித்தனர். இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு தாக்குதல் திட்டத்தை தற்போது இந்திய ராணுவத்தினர் இன்று அதிரடியாக முறியடித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் ராஜ்போரா நகரில் உள்ள ராணுவ முகாமிற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வகையிலான வாகனம் ஒன்று வந்துள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே இந்திய ராணுவத்திற்கு கிடைத்த உளவுத்துறை அறிக்கையின்படி தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் எனஇ இந்திய இராணுவத்தினர் முன்னெச்சரிக்கையாக இருந்தனர்.
இந்நிலையில் தான் இந்திய ராணுவ வீரர்கள் சந்தேகத்திற்குரிய அந்த காரை சுற்றிவளைத்து அதில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வாகனத்திலிருந்த நபர் தப்பியோடிய நிலையில், அந்த காரை ராணுவத்தினர் கைப்பற்றினர்.
பிறகு நடைபெற்ற சோதனையில் அந்த வாகனத்தில் சுமார் 40 கிலோ வெடிமருந்து இருப்பது இந்திய இராணுவத்தினரால் கண்டறியப்பட்டுள்ளது. பிடிபட்ட அந்த வாகன எண்ணானது, ஸ்கூட்டர் ஒன்றின் எண் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சந்தேகத்திற்குரிய அந்த காரை இந்திய ராணுவ வீரர்கள் நெருங்கியதும், அதிலிருந்த அந்த தீவிரவாதி தப்பி ஓடி விட்டான் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட வாகனம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வெடி வைத்து அழிக்கப்பட்டது.