ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருப்பதாகவும் தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.