காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் பகுதியை அடுத்த தாயார் குளம் ஊராட்சியில் மீண்டும் நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த நியாய விலைக் கடை திடீரென மூடிய நிலையில் மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாக தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்ற முகாமில் நியாய விலைக் கடை செயல்படாமல் இருப்பது குறித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் ஒன்றிய உறுப்பினர்களுடன் இணைந்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் நியாய விலைக் கடையை நேரில் ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில் நியாய விலைக் கடையில் உள்ள பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கை கணக்கிட்ட பின் நடவடிக்கை எடுத்தனர். தற்போது நியாய விலைக் கடை மீண்டும் திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு வேண்டிய பருப்பு ,அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நியாய விலைக் கடை செயல்படாமல் இருந்த காரணம் குறித்து தாயார் குளம் நியாயவிலைக்கடை நிர்வாகியிடம் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.