
ADMK: முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 2000 கொடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம். எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை கட்சிக்காக உழைத்த “செங்கோட்டையன் மேலேயே கை வெச்சிட்டியேன்னு கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்” என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இன்று குறைந்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனிநபர் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மனதில் கட்சியின் பலம் குறைந்துள்ளது எனவும் இதனால் மக்கள் மத்தியில் அ.தி.மு.க நம்பிக்கையை இழந்து வருகிறது எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அ.தி.மு.க எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய இடத்தில் குழப்பத்தில் சிக்கியுள்ளது. உட்கட்சி பிரச்சினை தலைமைப்போட்டி, தெளிவற்ற கொள்கை போன்றவற்றால் கட்சியின் வலிமை குறைந்து வருகிறது. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க தோல்வி அடைந்துள்ளது எனவும் அ.தி.மு.க 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி செல்லும் வழி மிகவும் மோசமானதாக உள்ளது எனவும் கடுமையாக சாடி உள்ளார்.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாவிட்டால் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். இந்த பின்னடைவு ஏற்படாமல் தடுக்கவும், தேர்தலில் தன்னை மீட்டெடுக்கவும் அ.தி.மு.க தெளிவான திட்டங்களையும், ஒற்றுமையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தன்னுடைய கருத்தை கூறினார். அ.தி.மு.க பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி மீது கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் கருணாஸ்-யின் பேச்சு அனைவரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக அ.தி.மு.க தன்னுடைய நிலையை சீரமைக்குமா அல்லது பிரச்சனைகள் தொடருமா? என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது.