ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் மோதிக்கொண்டுள்ள நிலையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியும் உதயமாகியுள்ளது. இவ்வாறு 2026 தேர்தல் களம் பல்வேறு திருப்பங்கள் எதிர்கொண்டு வரும் சமயத்தில், அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒவ்வொருவரும், ஒவ்வொரு திசையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடன், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டனர். மேலும் அதிமுக பல பிரிவுகளாக இருப்பதால் தான் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று கூறிய செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் முதலில் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலுமிருந்து நீக்கினார்.
இவ்வாறு தொடர்ந்து முக்கிய முகங்களை நீக்கி வரும் இபிஎஸ், கழகத்தின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, வடசென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசுவாசி, துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை ஏ.ஏ. கலையரசு, எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிரணி செயலாளர் இளவரசி, பகுதி மாணவரணி செயலாளர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர், புரசை கிருஷ்ணன் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அதிமுகவிற்கு அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யூகிக்கப்படுகிறது.