ADMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் செல்வாக்கு மிக்க கட்சியான அதிமுக உடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தங்கள் இருப்பை காட்டி கொள்ள இந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை கேட்டு வலியுறுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல், இபிஎஸ் தலைமைக்கு ஆபத்து வரும் வகையில் பாஜக சில செயல்களை செய்து வருகிறது.
அந்த வகையில், அதிமுவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பணியை பாஜக கையில் எடுத்துள்ளது. இதனை விரும்பாத இபிஎஸ் எங்கள் உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாமென பாஜகவிடம் கூறியும் அது கேட்பதாக தெரியவில்லை. செங்கோட்டையன், ஓபிஎஸ், அண்ணாமலை, என இபிஎஸ்க்கு எதிராக உள்ள அனைவரையும் டெல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுநாள் வரை அமித்ஷாவும், இபிஎஸ்யும் நேரில் சந்தித்து பேசி கொள்ளவில்லை.
ஜனவரியில் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில் அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அதிமுக-பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்கள் பரவி வரும் வேளையில், அதிமுகவின் முக்கிய அமைச்சர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி இருவரும் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். இந்த திடீர் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது குறித்து ஒரு தகவலும் கசிந்துள்ளது. பாஜக, அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாத இபிஎஸ், நிர்மலா சீதாராமன் மூலம் அதற்கு முட்டுக்கட்டை போடுதற்காக யோசனை செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அமித்ஷாவிடம் நேரடியாக சொல்ல முடியாத காரணத்தினால், நிர்மலா சீதாராமன் மூலம் அவருக்கு விளக்கலாம் என்பதற்காக, இபிஎஸ் இவர்களை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.