கோடை காலத்தை போன்று கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக, தமிழகத்திற்கு மின் தேவை 16,500 மெகாவாட்டை கடந்துள்ளது. சூரிய சக்தியின் மின் நிலையங்களிலிருந்து எப்போதுமில்லாத அளவிற்கு மின்சாரம் அதிக அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின் தேவை என்பது நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் சராசரியாக 15,000 மெகாவாட் மற்ற சமயங்களில் 14,000 மெகாவாட் என்றளவில் இருக்கிறது. இதே அளவு கோடை காலமான மார்ச் மற்றும் ஏப்ரல், மே, மாதங்களில் அதிகரித்து காணப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனடிப்படையில், இந்த வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் மின் தேவை 17,563 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரையிலான உச்ச அளவாக இருந்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்தது. ஆகவே மின் தேவை குறைந்து நாள்தோறும் வழக்கமான 15,000 மெகாவாட் என்றளவில் இருந்தது. இந்த நிலையில் ஒரு வார காலமாக கோடை காலம் போல வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஆகவே மீன் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மின் தேவை 16, 500 மெகாவாட்டை கடந்தது. அன்று மாலை 6:40 மணியளவில் மின் தேவை 16,537 மெகா வாட்டாக இருந்தது. நேற்று காலை மின் தேவை 15,500 மெகாவாட் என்றளவில் காணப்பட்டது. மின் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கிடைத்தது.