அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது. ராயப்பேட்டையிலிருக்கின்ற கட்சி தலைமை அலுவலகம் முன்பு பழனிச்சாமி தரப்பினருக்கும், பன்னீர்செல்வம் தரப்பினருக்குமிடையே மோதல் நடைபெற்றது. இதனையடுத்து கட்சி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய் கோட்ட அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
அவருடைய இந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும், தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி வருவாய் கோட்ட அதிகாரியின் அறிக்கை ,காவல்துறை தரப்பு அறிக்கை மற்றும் புகைப்படம், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்தார்.
பழனிச்சாமியின் சார்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ,பன்னீர்செல்வம் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ் மற்றும் அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் மற்றும் காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் உள்ளிட்டோர் வாதாடினர்.
வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அடுத்ததாக இந்த வழக்கில் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பு வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.